கும்பகோணம், செப். 17: கும்பகோணம் அடுத்த பாத்திமாபுரத்தில் கடந்த 10 நாட்களுக்கு கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். கும்பகோணம் பாத்திமாபுரத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் துப்புரவு தொழிலாளர்களாகவும், அடித்தட்டு மக்களாகவும் வசித்து வருகின்றனர். இப்பகுதி சாலையிலிருந்து பள்ளத்தில் இருப்பதால் சிறிதளவு மழை பெய்தாலும் மழைநீர் தேங்கி நிற்கும். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவர்.
இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பாத்திமாபுரம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாக்கடையில் உள்ள கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகியுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வேறு வழியின்றி அதில் நடந்து செல்கின்றனர்.
அப்பகுதியில் விநியோகிக்கும் தண்ணீர் சமைப்பதற்கு சுகாதாரமாக இல்லாததால் சமைத்து வைத்த உணவுகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதை சாப்பிட்ட சிலருக்கு வாந்தி ஏற்படுவதால் வெளியிலிருந்து தண்ணீர் பிடித்து சமைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாத்திமாபுரம் முழுவதும் தேங்கியுள்ள அசுத்த தண்ணீரில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு சுகாதார பணிகளை அதிகாரிகள் செய்து வந்தாலும், கும்பகோணம் பாத்திமாபுரத்தில் கடந்த 10 நாட்களாக கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயமாகும். எனவே பாத்திமாபுரத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.