பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றி குப்பைகள் கொட்டுவதால் பக்தர்களுக்கு இடையூறு கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு

கரூர், செப். 17: பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றிலும் குப்பைகள் கொட்டுவதால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலை சுற்றிலும் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வளாகத்தில் குடிமகன்களின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. மேலும் கோயில் வெளிப்பகுதியில் தரைக்கடைகளின் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். போஸ் சிலை சீரமைக்க கோரிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நகராட்சிக்குட்பட்ட 29வது வார்டு திருமாநிலையூர் நடுநிலைப்பள்ளி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும். இதே போல் நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் மேற்கூரைகள் நீட்டிக் கொண்டிருப்பதையும் சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நகராட்சி பகுதியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று கொசு உற்பத்திக்கு வழிவகுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மார்க்கெட் அருகில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போசின் சிலை பராமரிப்பின்றி உள்ளது. இதனை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கரூர் நகராட்சிக்குட்பட்ட கழிவு நீர் வெளியேறும் பாதைகளில் அதிகளவு அடைப்பு உள்ளது. இதனால் கழிவு நீர் தேக்கம் ஏற்பட்டு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இவற்றையும் சீரமைக்க வேண்டும்.

கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் அதிகளவு இறைச்சி கடைகள் உள்ளன. இதனை சுற்றிலும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பன போன்ற பல்வேறு கோரிக்கைள் சம்பந்தமான மனுக்கள் அளிக்கப்பட்டன.

Tags : People's Party ,Collector ,pilgrims ,office ,
× RELATED இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண நாள் விழா