×

ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது

நாகர்கோவில், செப்.17: ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என்று நாகர்கோவிலில் வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் வரும் 18ம் தேதி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த  உள்ளார். இதில் பங்கேற்க உள்ள வசந்தகுமார் எம்.பி குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை ஆய்வு செய்து, பயணிகளிடம் ரயில்வே தேவைகள் தொடர்பாக குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது. ரயில்வே துறையை நம்பி 13 லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு 10 பேர் என்றால் 1 கோடியே 30 லட்சம் மக்கள் ரயில்வே கொடுக்கின்ற சம்பளத்திற்காக காத்திருக்கின்றனர். ரயில்வேயை ஒருபோதும் தனியார்மயமாக்க கூடாது என்று பராாளுமன்றத்தில் உரத்த குரலில் பேசி அமைச்சரிடமும் மனு கொடுத்திருக்கின்றேன்.

தனியார்  மயமாக்குகின்றனர் என்றால் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் என்பது, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ஆறு வருடங்களுக்கு முன்பு கட்டிய கட்டிடத்தை கூட இன்றும் திறக்கவில்லை. கழிவறை உள்ளிட்ட வசதிகள் அங்கு உள்ளது. இதனை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  கொடுக்கவில்லை. இது மாபெரும் தவறு. ஒரு ஒப்பந்த தொழிலாளரை வைத்து அவர்தான் பணிகளை இங்கு செய்து வருகின்றார். ரயில்வே அமைச்சரும், அதிகாரிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இங்கு ரயில்வே நிரந்தர பணியாளர்களை பணியமர்த்தி பணி செய்தால் நன்றாக இருக்கும். களியக்காவிளை முதல் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி நெடுமங்காடு சாலை மோசமாக உள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் உட்பட அதிகாரிகளிடம் பேசினேன். சாலை சீரமைப்பு பணிகள் 15 நாளில் டென்டர் போட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர். இப்போது பேட்ஜ் ஒர்க் செய்கின்றனர். அதனை சரியாக செய்யவில்லை என்று புகார் கூறியுள்ளனர். தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது. படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம். உள்ளாட்சி தேர்தல் என்பது அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர முடியுமா? என்பதற்கு ஒரு அளவு கோலாக இருக்கும் என்று கருதி அதனை நடத்த பயப்படுகின்றனர்.
அதனாலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தி தோற்று விட்டால் அடுத்து ஆட்சிக்கு வர முடியாது என்று எண்ணுகின்றனர். அடுத்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. அதற்குள் அவர்கள் பஞ்சாயத்து தேர்தலையாவது நடத்திட வேண்டும். ரோடு, குடிநீர், தெருவிளக்கு எல்லாமே எம்.பி.,யிடம்தான் கேட்கின்ற நிலை மக்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஐயப்பன், உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...