×

அம்பை அருகே வாகைக்குளத்தில் நாராயண சுவாமி கோயில் தேரோட்டம்

அம்பை, செப். 17:  அம்பை அருகே வாகைக்குளத்தில் நாராயணசாமி கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா மன் நாராயணசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்ட திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அய்யா தண்டியல் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப்பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களில் வீதியுலா வந்தார். மேலும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால்தர்மம் மற்றும் அன்னதர்மமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10ம் திருவிழாக்களில் பால்குடம், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. சிகர நிகழ்ச்சியின்  11வது நாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா மன் நாராயணசாமி எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார்.  

இதில் சுற்றுவட்டார பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அன்புகொடி மக்கள் திரளாக பங்கேற்று ‘‘அய்யா சிவ, சிவ, அரகர, அரகர’’ பக்தி கோஷங்கள் முழங்க வடம்பிடித்து தேர் இழுத்தனர்.நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை மேளம், சிங்காரி மேளம் நையாண்டி மேளம், சிறுமிகளின் கோலாட்ட நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பவனி வந்து திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை  வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.

Tags : Narayana Swamy Temple Therottam ,
× RELATED பாவூர்சத்திரம் வென்னிமலை கோயிலில் இன்று வருஷாபிஷேகம்