×

அரக்கோணத்தில் வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க 2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகர ஊரமைப்பு துணை இயக்குனர் உட்பட 2 பேர் கைது வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

வேலூர், செப்.17:அரக்கோணத்தில் வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகர ஊரமைப்பு துணை இயக்குனர், ஓய்வு பெற்ற கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சென்னையை சேர்ந்தவர் கணேஷ்(52), ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவர் அரக்கோணம் அடுத்த தணிகை போளூரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 2.30 லட்சம் சதுர அடி நிலம் வாங்கியுள்ளார். தொடர்ந்து அங்கு வீட்டு மனைகள் போட அனுமதி கேட்டு வேலூர் அண்ணா சாலையில் உள்ள மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அவருக்கு அனுமதி வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்து வந்தார்களாம்.இந்நிலையில், கடந்த வாரம் வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குனர் ஞானமணியிடம் சென்று வீட்டுமனைப்பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கும்படி கேட்டுள்ளார். அப்போது, அங்கீகாரம் வழங்க ₹3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஞானமணி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த பேச்சுவார்தையில் ₹2 லட்சம் கொடுக்க கணேஷ் ஒப்புக்கொண்டார்.

ஆனாலும், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேஷ் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில், கணேஷ் ₹2 லட்சம் பணத்துடன் நேற்று மதியம் 1 மணியளவில் வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு புரோக்கராக இருந்த ராஜசேகர் என்பவர் மூலம் ₹2 லட்சத்தை துணை இயக்குனர் ஞானமணிக்கு கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி (பொறுப்பு) வேதநாதன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி, பிரியா மற்றும் போலீசார் ஞானமணி, ராஜசேகரனை கையும் களவுமாக பிடித்தனர்.தொடர்ந்து அலுவலக கதவுகளை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆவணங்கள், சமீபத்தில் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குனராக சென்னையை சேர்ந்த ஞானமணி(55) என்பவர் உள்ளார். இவர் வீட்டு மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்க பலரிடம் லஞ்சம் வாங்கியிருப்பதாக தெரிகிறது.இதற்காக, வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற சத்துவாச்சாரியை சேர்ந்த ராஜசேகர்(62) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், நடத்திய சோதனையில் ₹2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது ஞானமணி, ராஜசேகர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குனராக ஞானமணி பொறுப்பேற்று 11 மாதங்களாகிறது. இவர் பொறுப்பேற்ற பிறகு வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர்.

கடந்த ஆண்டு ₹3.28 லட்சம் பறிமுதல்
வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் கடந்த ஆண்டு வரை சத்துவாச்சாரியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், அப்போதைய துணை இயக்குனர்(பொறுப்பு) சுப்பிரமணியன் வீட்டு மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்குவதாக, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இயைதடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ₹3.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக துணை இயக்குனர் சுப்பிரமணியன் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சத்துவாச்சாரியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து லஞ்சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேலூர் அண்ணா சாலையில் புதிதாக கட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆண்டு 9 நாட்கள் கழித்து மீண்டும் நடந்த சோதனையில் மீண்டும் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் முறைகேடுக்கு முற்றுப்புள்ளி எப்போது?வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில்தான் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள், வீட்டுமனை பிரிவுகள் போன்றவற்றுக்கான திட்ட வரைபட அங்கீகாரம், ஒப்புதல் அளித்தல், அனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு இடங்களுக்கும் வீட்டு மனைகளாக அங்கீகாரம் வழங்குவதில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே, அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடரும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Velur ,Deputy Director ,Urban Movement ,
× RELATED ₹14 கோடி செலவில் தொடங்கியது வலை பின்னும் கூடம்