×

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் பச்சிளம் குழந்தை கன்னத்தில் தையல்

* அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்டதாக அலட்சிய பதில் * நடவடிக்கை கோரி உறவினர்கள் போலீசில் புகார்

திருப்பத்தூர், செப்.15: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு மருத்துவரின் கவன குறைவால் கன்னத்தில் தையல் போட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஆலங்காயம் அடுத்த பெத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன், மெக்கானிக். இவரது மனைவி தணிகைஅரசி(28). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், தணிகைஅரசி மீண்டும் கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சிறிதுேநரத்தில் பிறந்த குழந்தையை செவிலியர்கள் இளவரசன் மற்றும் உறவினர்களிடம் காண்பித்தனர். அப்போது குழந்தையின் கன்னத்தில் இரண்டு தையல்கள் போடப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செவிலியரிடம் கேட்டபோது பிறக்கும்போதே குழந்தைக்கு காயம் இருந்ததால், ரத்தம் வராமல் இருக்க தையல் போட்டோம் என்று அலட்சியமாக தெரிவித்தார்களாம்.

இதையடுத்து உறவினர்கள் அறுவைசிகிச்சையின்போது டாக்டர்களின் கவனக்குறைவால் பிளேடு குழந்தையின் கன்னத்தில் பட்டிருக்கலாம் இதனால்தான் கன்னத்தில் தையல் போட்டுள்ளனர் என்று கூறி மருத்துவ அலுவலர் செல்வகுமார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிரசவம் பார்த்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் செல்வகுமார் கூறுகையில், `தாயின் கர்ப்பப்பையில் குழந்தையின் முகத்தின் தோல் ஒட்டிக் கொண்டிருக்கும். அறுவை சிகிச்சை செய்து எடுக்கும்போது நூற்றில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற தழும்புகள் ஏற்பட மருத்துவ ரீதியாக வாய்ப்பு உள்ளது. அதுபோல் தான் இந்த சம்பவம் நடந்திருக்கும். இது மருத்துவரின் கவனக்குறைவு அல்ல. அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தழும்பு தெரியாமல் இருக்க தையல் போடப்பட்டது. இருந்தாலும், அவரது கணவர் கொடுத்த புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

Tags : baby ,Bachchalam ,doctor ,government hospital ,Tirupathur ,
× RELATED மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு