செய்யாறு மாவட்டம் ஏற்படுத்த கோரி பிரதமருக்கு மனு

செய்யாறு, செப்.15: செய்யாறு மாவட்டமாக்க கோரும் இயக்கம் சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 1959ம் ஆண்டு சித்தூர் ஜில்லாவில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், செய்யாறு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை பிரிக்கப்பட்டு, செய்யாறு கோட்டம் தவிர மற்ற அனைத்தும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டன. அதன் அடிப்படையில் 60 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வரும், செய்யாறு கோட்டத்தை புதிய வருவாய் மாவட்டமாக்க அறிவிக்க வேண்டும்.

புதியதாக மாவட்டமாக அறிவிக்க கோரும், செய்யாறு கோட்டத்தில் செய்யாறு, ஆரணி ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் அமைந்துள்ளன. செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி ஆகிய வட்டங்களில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆரணி நாடாளுமன்ற தொகுதி, வந்தவாசி தனி தொகுதி, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சி பகுதிகளும் அமைந்துள்ளன. மேலும், செய்யாறு கோட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு பதிவாளர் அலுவலகம், சுகாதார துணை இயக்குனர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தென்கிழக்கு ஆசியாவிலேயே 2வது பெரிய ஆலையாக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, சிப்காட், இஎஸ்ஐ மருத்துவமனை, நவீன அரிசி ஆலை, மாவட்ட தலைமை மருத்துவமனை, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம், மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம், சுமார் 6 ஆயிரம் கிராமத்து மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசு கலை கல்லூரி, பலவகை தொழில்நுட்ப கல்லூரி என 57க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன.

சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், முதியோர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஒருநாள் முழுவதும், அதிக பணம் செலவழித்து செல்ல வேண்டியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வரும், செய்யாறு கோட்டத்தில் இருந்து அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, நிர்வாக வசதிக்காகவும், அரசு நலத்திட்டங்கள் விரைவாக கிடைத்திடவும், திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கும் பட்சத்தில் அனைத்து தகுதிகளையும் பெற்று, நீண்ட காலங்களாக செயல்பாட்டுடன், சொந்த கட்டிடங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ள, செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவானது குடியரசு தலைவர், நிதியமைச்சர், மத்திய திட்ட கமிஷனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : district ,
× RELATED பிரதமரின் செயலாளர் போன்று போனில் பேசி மர்மநபர் மோசடி