×

3 ஆண்டுகள் முதுநிலைப் பட்டியலின்படி வழங்கல் அறநிலையத்துறையில் 94 பேர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு

நெல்லை, செப். 15: தமிழக அறநிலையத்துறையில் கடந்த 3 ஆண்டுகளாக தகுதி அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியலில் இருந்த 94 உதவியாளர்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுகின்றனர்.  தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையில் கடந்த  2017-18ம் ஆண்டு,  2018-19ம் ஆண்டு, மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான அமைச்சுப்பணி உதவியாளர்கள் நிலையில் இருந்து கண்காணிப்பாளர்கள் (ஆய்வர், தலைமை எழுத்தர், மேலாளர்) பதவி உயர்வு பட்டியல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி 2017-18ம் ஆண்டு பட்டியலின்படி 10 பேருக்கும், 2018-19ம் ஆண்டில் உள்ள பட்டியலில் 17 பேருக்கும், 2019-20ம் ஆண்டு பட்டியலில் 67 பேருக்கும் என மொத்தம் 94 பேருக்கு உதவியாளர் பணியில் இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு உத்தரவை அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.  இவர்களில் அயல்பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணை தனியே பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணி உயர்வு பெற்றவர்களை தற்போதுள்ள பணியிலிருந்து விடுவிக்க தொடர்புடைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பணி நியமனம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் தாமதமின்றி சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வு மூலம் கோவில்பட்டி, நாகர்கோவில், தென்காசிவடக்கு, கோவை, பழனி, மதுரை,் திருச்சி, சேரன்மகாதேவி, திருவைகுண்டம், புளியங்குடி உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள அறநிலையத்துறை ஆய்வாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நீண்ட இடைவெளிக்கு பின்னர் 94 பேர் அறநிலையத்துறையில் ஆய்வாளர்கள் பணியிடத்திற்கு பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் ஆய்வாளர் நிலையில் இருந்து வந்த காலியிடங்கள் மற்றும் பணிச்சுமை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

இதன் மூலம் கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தவர்கள் இனி அவர்களுக்கு உரிய ஆய்வாளர் சரகப்பணியை மட்டும் முழுமையாக கவனிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  94 பேர் உதவியாளர்கள் நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்றுள்ளதால் உதவியாளர்கள் பணியிடத்திற்கு அதற்கு கீழ் உள்ள நிலையில் உள்ளவர்கள் பதவி உயர்வில் வருவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

Tags : persons ,field ,Masters ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...