×

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,806 வழக்குகளுக்கு ரூ.5.34 கோடி தீர்வு

திருச்சி, செப். 15: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நீதிபதி முரளிசங்கர் துவக்கி வைத்தார். இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

 இதில் 1.385 சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்குகளில் ரூ.12 லட்சத்து 11 ஆயிரத்து 910 இழப்பீடு பெற்று தரப்பட்டது. மேலும் 79 காசோலை, மோசடி வழக்குகளில் ரூ. 1 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 35 இழப்பீடும், 10 மோட்டார் வாகன வழக்குகளில் 39 லட்சத்து 23 ஆயிரத்து 586 இழப்பீடும், 5 குடும்ப நல வழக்கில் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடும், 5 தொழிலாளர் இழப்பீட்டு வழக்கில் ரூ.25 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடும், 81 உரிமையியல் சம்பந்தமான வழக்கில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 94 ஆயிரத்து 431 இழப்பீடும் பெற்றுத் தரப்பட்டது.

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில்லா வழக்கான 241 வங்கி மற்றும் நிதிநிறுவன வழக்குகளில் ரூ.1 கோடியே 81 லட்சத்து 76 ஆயிரத்து 112 இழப்பீடும் பெற்றுத் தரப்பட்டது. மொத்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 13 ஆயிரத்து 845 வழக்குகளில் 1,806 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரத்து 543 இழப்பீடு பெற்று தரப்பட்டது.இந்த விசாரணையில் அனைத்து மாவட்ட நீதிபதிகளும் மற்றும் வக்கீல்கள், சங்க நிர்வாகிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நந்தினி செய்திருந்தார்.

Tags : National People's Court ,
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி