×

குடந்தை அகராத்தூரில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

கும்பகோணம், செப். 15: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த அகராத்தூர் கிராமத்தில் மண் மாதிரி குறித்த முனைப்பு இயக்கம் மற்றும் விவசாயிகளுக்கு மண் மாதிரி அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார். பயிற்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நெடுஞ்செழியன் தலைமை வகித்து, மண்வள அடையாள அட்டையை பேசுகையில், மத்திய அரசு மண்வள அட்டை இயக்கம் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட பயிருக்கு தேவைப்படும் உரத்தில் அளவை விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதனால் தேவைக்கதிகமாக உரம் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.

விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த மண் வள அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .விவசாயிகள் அனைவரும் ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை இட்டு மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் பெற வேண்டும். மேலும் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள் இணைந்து தங்களது வயதுக்கு ஏற்ப மாதம்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை தொகையினை செலுத்தி 61வது வயது முதல் மாதம் தோறும் வாழ்நாள் முழுவதும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக பெறலாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்தத் திட்டத்தில் தொடர விவசாயிகளுக்கு விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் சேர அருகில் உள்ள இ சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து கொண்டு இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றார். மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) சாருமதி முன்னிலை வகித்து பேசுகையில், ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப முறையில் விவசாயிகள் அனைவரும் நெல் சாகுபடி செய்து உயிர் உரங்களையும், பண்ணை கழிவுகளையும் விளைநிலங்களில் பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும். பண்ணைக் கழிவுகளை பயன்படுத்துவதால் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் பிரதம மந்திரியின் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன திட்ட சிக்கன நீர் பாசன முறையை கடைப்பிடிக்க வேண்டும்.இந்தத் திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள், தெளிப்புநீர் கருவிகள், மழைத்தூவான் மற்றும் சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நுண்ணீர்பாசனத் திட்டத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பயிற்சியில் வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வேளாண்மை உதவி அலுவலர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Farmers' Identity Camp ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...