×

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக புதுகை சிஇஓ அலுவலகத்தில் மனு

புதுக்கோட்டை, செப்.15: புதிய கல்வி கொள்கைக்கு எதிராக புதுகை சிஇஓ அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தினால், மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனக்கூறி திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றது. இந்நிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய கல்வி கொள்கைப்படி நடப்பு கல்வி ஆண்டிலேயே 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

 இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அரசின் முடிவை கண்டித்தும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், மக்களிடம் கருத்தை கேட்காமலே மத்திய அரசின் இந்த கல்வி கொள்கை முடிவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதாகக் கூறி புதுக்கோட்டை பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கணேஷ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Office ,Puducherry CEO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...