வேதாரண்யம், செப்.15: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் 9 ஆண்டுகளாக நடைபெறும் வண்டல் - அவரிக்காடு பாலப்பணியை விரைவில்முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் வண்டல் - அவரிரிக்காட்டில் பாலவசதி இல்லாததால் மழைக்காலங்களில் நல்லாறு, அடப்பாறு ஆகிய பகுதிகளில் வௌ்ள பெருக்கு ஏற்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் ஆண்டு தோறும் படகில்தான் சென்று வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் வண்டல் அவுரிக்காடு இணைப்புபாலம் கட்டும் பணி ரூ.11.35 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பணி தாமதப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முடிய வேண்டிய இப்பணி கடந்த 9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புதுப்பாலத்தில் இந்தாண்டு சென்று விடலாம் என்ற ஏக்கம் 9 ஆண்டாக நீடித்து வருகிறதே, தவிர இன்னும் பாலப்பணி முடிந்தபாடில்லை.
தற்போது பாலப்பணி 95 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்ட நிலையில், பாலத்தின் அருகே உள்ள நல்லாற்றில், பாலத்தின் ஓரமாக சென்று வந்த பாதைக்கு மேல் காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாலத்தின் கீழே நடந்து வந்த பொதுமக்கள் அவரிக்காட்டிற்கு செல்ல ஏணி வைத்து பாலத்தின்மீது ஏறி சென்று வருகின்றனர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் பாலத்தின் கீழ் ஓடும் காவிரி நீரிலேயே நடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.