காரைக்காலில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஜனவரி மாதம் திறக்க வாய்ப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

காரைக்கால், செப்.15: காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வரும் ஜனவரியில் திறக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் மிகவும் பழுதாகிப்போனதால், அரசு விளையாட்டுத் திடல் அருகே, புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.8.5 கோடி செலவில் அமைக்கும் பணி, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
சுமார் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை, மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சிவகடாட்சம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், புதிய நீதிமன்ற வளாகத்தில் இடநெருக்கடி உள்ளதால், இதை சற்று மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறையினருக்கு சில ஆலோசனை வழங்கி, பணிகளை விரைவாக முடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்துக்குள் மாதிரி கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட நீதிபதிகள் வந்து பார்வையிட்டு, சில மாற்றங்களை செய்யக் கூறி உள்ளனர். இன்னும் 3 மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதம் திறப்பு விழா நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Public Works Department ,court complex ,Karaikal ,
× RELATED அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி பொதுப்பணி துறை அலுவலகம் முற்றுகை