×

தோகைமலை சின்ன ரெட்டியப்பட்டி பெரிய காண்டியம்மன் கோயிலில் மழை, அமைதி வேண்டி மகாலெட்சுமி யாகம்

தோகைமலை, செப். 15: தோகைமலை அருகே சின்னரெட்டியபட்டி பெரியக்காண்டியம்மன் கோயிலில் மழை மற்றும் உலக அமைதி வேண்டி மகாலெட்சுமி யாகம் நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள சின்னரெட்டியபட்டியில் விநாயகர், பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார், அம்மன்கள், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியே கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பொதுமக்கள் சார்பில் உலக அமைதி வேண்டி 8ம் ஆண்டு வருட அபிஷேகம், மகாலெட்சுமி யாகம் அபிஷேக விழா நடந்தது.

மன்னர்கள் காலத்தில் தங்கள் நாடு வளம் பெறவும், நல்ல மழை பெய்யவும் பொதுமக்கள் அனைவரும் வீரம், செல்வம், கல்வி பெற்று உலகில் அமைதியுடன் வெற்றியுடன் வாழ மகாலெட்சுமி யாகம் செய்வது வழக்கம். அதேபோல் தற்போதும் உலக மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று வெற்றியுடன் வாழவும், பல வருடங்களாக மழை இல்லாமல் வறட்சியில் பொதுமக்கள் பிழைப்பு இல்லாமல் வறுமையில் இருப்பதை நீக்க வேண்டும் என்று சின்னரெட்டியபட்டியில் உள்ள பெரியக்காண்டியம்மன் கோயிலில் மகாலெட்சுமி யாகம் செய்ய கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்தனர்.

அதனை தொடர்ந்து முதல் நாள் விக்னேஸ்வர் பூஜை, நவகிரக பூஜை, மகாலெட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகசாலை பூஜை நடந்தது. பிறகு 3 நாட்கள் 1008 சங்கு அபிஷேகம், 1008 தாமரை பூஜை, 1008 மகாலெட்சுமி யாகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த யாக குண்டத்தில் பழங்கள், தேன், பால், தயிர், நெய், பல்வேறு வகையான சாதங்கள், கரும்பு, மஞ்சள், குங்குமம், கற்கண்டு. பட்டு புடவைகள். நவ தானியங்கள் உள்பட 1108 வகையான பொருட்களை கொண்டு யாகசாலை பூஜை செய்தனர்.

பின்னர் அதே பகுதியில் உள்ள நாகலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பொpயக்காண்டியம்மனுக்கு பால் குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பிறகு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags : Great Kandiyamman Temple ,
× RELATED கிராம மக்கள் உண்ணாவிரதம் எதிரொலி...