×

நாமக்கல் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

நாமக்கல், செப்.15: நாமக்கல் ரயில் நிலையத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து நாமக்கல் ரயில் பயணிகள் நலசங்கத்தின் செயலாளர் சுப்ரமணி கூறியிருப்பதாவது:  நாமக்கல் ரயில் நிலையத்தில், கடந்த 2013ம் ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. நாள்தோறும் 2 பயணிகள் ரயில் மட்டுமே வந்து செல்கிறது. இதனை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல போக்குவரத்து வசதியும் போதுமானதாக இல்லை. டெபாசிட் மற்றும் வாடகை தொகை அதிகமாக உள்ளதால், ரயில் நிலையத்திற்குள் யாரும் கேண்டீன் வைக்க முன்வரவில்லை. இதனால் தண்ணீர் மற்றும் சிற்றுண்டி எதுவும் வாங்க முடியவில்லை. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ரயில் நிலைய வளாகத்திற்குள், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. ஆனால், இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிறது. இதனால், தொட்டிக்கு அடியில் செடிகள் முளைத்து, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதோடு, ரயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

Tags : infrastructure facilities ,Namakkal Railway Station ,
× RELATED சுற்றுலா துறை அதிகாரி நேரில் ஆய்வு...