×

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

நாமக்கல், செப்.15: நாமக்கல்லில் அரசு பள்ளிகளில் பணி புரியும் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம், நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குமார் கலந்து கொண்டு பேசியதாவது: சமூகம் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. தற்போது நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது, சமூகம் ஆசிரியர்கள் மீதான நம்பிக்கை இழக்கிறதோ என எண்ண தோன்றுகிறது. பள்ளிக்குள் புகுந்து ஒரு ஆசிரியரை மக்கள் தாக்குகிறார்கள். அவர்  மீது விழுந்த அடி, அனைத்து ஆசிரியர்கள் மீதும் விழுந்த அடியாக தான், நான் கருதுகிறேன். இந்த நிலை ஏன் வந்தது? என்பதை அனைத்து ஆசிரியர்களும் யோசிக்க வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்களை, சமுகம் ஒருபோதும் மன்னிக்காது.

சமூகம் ஆசிரியர்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் உற்று நோக்குகிறது. தலைமை ஆசிரியர்கள், தங்களுக்கு உரிய கடமைகளை உணர்ந்து, பள்ளியில் பணியாற்ற வேண்டும். தலைமை ஆசிரியர் பணி என்பது மிகுந்த அதிகாரம் வாய்ந்த பதவியாகும். அது எந்த காலமாக இருந்தாலும், பள்ளியின் ஒட்டுமொத்த அதிகாரமும் தலைமை ஆசிரியரிடம் தான் இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப அந்த அதிகாரத்தை, தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தினால் மாணவர்களும், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள். இவ்வாறு துணை இயக்குனர் குமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி அருளரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ், உதயக்குமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், குமார்,
மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Training Camp ,Government School Headmasters ,
× RELATED நியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்