×

நடுப்பையூரில் கால்நடை நோய் விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, செப்.15:  தேசிய  கால்நடை நோய் தடுப்புத் திட்டம், தேசிய செயற்கை முறை கருவூட்டல்  திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐசிஏஆர் வேளாண்மை  அறிவியல் மையமானது கோமாரி நோய், கருச்சிதைவு நோய் மற்றும் செயற்கை  கருவூட்டல் முகாமானது காவேரிப்பட்டணம் ஒன்றியம் நடுப்பையூர் கிராமத்தில்  நடந்தது. வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை  விஞ்ஞானி சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை  இயக்குநர் டாக்டர் மனோகரன், கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும்  செயற்கை கருவூட்டல் முறையின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை கூறி  கையேடுகளை வழங்கினார். கால்நடை துறை உதவி இயக்குநர் டாக்டர் அருள்ராஜ்,  கால்நடைகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு மற்றும் கன்று சிதைவு நோய்களை  கட்டுப்படுத்தும் முறைகளை எடுத்துரைத்தார்.

பையூர் மண்டல ஆராய்ச்சி  நிலையத்தின் பேராசிரியர் தமிழ்செல்வன், கால்நடை வளர்ப்பில் அசோலா  பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முகாமில் 250  மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசியும், 30 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டலும்  அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு  தாது உப்புக்  கலவையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள்  சீனிவாசன், சிவசங்கரி, சோமசேகரன், வேளாண்மைத்துறை உதவி வேளாண் அலுவலர்  ராமசாமி, வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கால்நடை  டாக்டர் ரமேஷ், குணசேகர் (மண்ணியல்), செந்தில்குமார் (வேளாண் விரிவாக்கம்)  கலந்துகொண்டனர்.

Tags : Veterinary Disease Awareness Camp ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்