×

குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம், விமான நிலையம் அமைக்க நடவடிக்கை குமரி மகா சபா கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி பேச்சு

நாகர்கோவில், செப்.15: குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம், விமான நிலையம் அமைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற குமரி மாவட்ட வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார். குமரி மகா சபா சார்பில் குமரி மாவட்ட வளர்ச்சி ஆலோசனை குழு கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. குமரி மகா சபா தலைவர் ராவின்சன் தலைமை வகித்தார். வளர்ச்சி குழுவின் தலைவர் சொக்கலிங்கம், குமரி மகா சபா நிர்வாகிகள் ஜேசர் ெஜபநேசன், சோபனராஜ், ஜாண்சன், ரிச்சர்ட்சன் ஆசீர், அன்பு தாமஸ் சாமுவேல், நடராஜன் உள்ளிட்டோர் குமரி மகா சபாவின் திட்டங்கள் தொடர்பாக விளக்கி பேசினர். சுற்றுலா மேம்பாடு, நவோதயா பள்ளியை கொண்டுவருதல், சாலைகள் மேம்பாடு, பல்கலைக்கழகம் அமைத்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், தொழிற்சாலைகள் தொடங்குதல், பத்மநாபபுரம் அரண்மனையை மீட்ெடடுத்தல், சரக்கு பெட்டக துறைமுக திட்டம் போன்றவை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி கலந்து கொண்டு பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் நேரடியாக வலியுறுத்தினேன். அவர் இதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளார். இப்போது இங்கு அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அது சார்ந்த நிபுணர்கள் கூறுவதால் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குமரி மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழகம், மாநில அரசால் அமைக்கப்படும் பல்கலைக்கழகம் போன்றவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் ஒரே வரிசையில் இருந்து மாவட்ட வளர்ச்சிக்காக பணியாற்றுகிறோம். பல்கலைக்கழகம் அமைத்தல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 6 மாத காலத்தில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் வகையில் எங்களது செயல்பாடுகள் அமையும். குமரி மாவட்ட வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம். சரக்கு பெட்டக மாற்று முனைய திட்டத்தில் உடன்பாடு இல்லை. ஒரு கப்பலில் மட்டும் 36 ஆயிரம் கண்டெய்னர்கள் வந்து இறங்குகிறது என்றால் அதனை கொண்டு வைக்க எங்கே இடம் இருக்கிறது.

எனவே சரக்கு பெட்ட மாற்று முனைய திட்டத்தில் உடன்பாடு இல்லை. குமரி மாவட்டம் சிறிய நிலப்பரப்பை கொண்டுள்ள பகுதி. இங்கு சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் வேண்டாம் என்று நீங்களும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் வளர்ச்சிக்கென குமரி மகா சபா உத்தேசித்துள்ள திட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுவோம். அதே வேளையில் சரக்கு பெட்டக முனைய திட்டம் மாவட்டத்தில் ஏற்புடையது அல்ல. மாவட்டத்தில் சாலைகள் மேம்பாடு, குளங்கள் தூர்வாரி ஆழப்படுத்துதல் போன்றவை அத்தியாவசிய பணிகள் ஆகும்.

இவை செயல்படுத்த வேண்டும். பல்கலைக்கழகம், விமான நிலையம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டிய தேவையான திட்டங்கள். இவற்றை செயல்படுத்த குமரி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் துணையாக இருப்பர்’ என்றார். கூட்டத்தில் குமரி மகா சபா நிர்வாகிகள் ஆஸ்டின், நேசகுமார், தம்பிராஜ், அலெக்சாண்டர், சந்திரமோகன், லிபின், அனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vasanthakumar MP ,meeting ,Kumari Maha Sabha ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...