×

தக்கலையில் சப் கலெக்டரை கண்டித்து போராட்டம் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 447 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், செப்.15:  தக்கலையில் சப் கலெக்டரை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்பட 447 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை சீரோபாயிண்டில் நீர்வழி புறம்போக்கில் இருந்த 52 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட, சப் கலெக்டர் சரண்யா அறியை கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று முன் தினம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.  

மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன், மதிமுக இளைஞரணி அமைப்பாளர் பள்ளியாடி குமார், எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், குவிக்கப்பட்டு இருந்த போலீசார் எம்எல்ஏ உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.

இதனால் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவரையும் கைது செய்து திருமண மண்டபம் கொண்டு சென்றனர். 75 பெண்கள் உள்பட் 447 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 447 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் ரோடு மறியல் செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Mano Thangaraj MLA ,Sub Collector ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...