×

சென்னையில் பெண் இன்ஜினியர் பலியான பிறகும் அமைச்சர் சம்பத்தை வரவேற்று அதிமுக பிளக்ஸ் போர்டு பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்

திங்கள்சந்தை, செப். 15: நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் அமைச்சரை வரவேற்று வைத்திருந்த பேனர்களை பேரூராட்சி பணியாளர்கள் அவசர, அவசரமாக அகற்றினர். சென்னை  பள்ளிக்கரணையில் சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்து பைக்கில் சென்ற சுபஸ்ரீ  என்ற இளம்பெண் கீழே விழுந்தார். அந்த சமயத்தில்  பின்னால் வந்த குடிநீர் லாரி ஏறி நசுக்கியதில், சுப துடிதுடித்து  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது. நீதிமன்ற தடை உத்தரவு இருந்தும், அந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக  செயல்படுத்தாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான  அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது. மேலும் நீதிமன்றமும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதையடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட் அவுட்டுகள்  வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட  கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடையில்  உள்ள செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியில், தொழில் மேம்பாட்டு  கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர்  எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்.  அமைச்சரை வரவேற்கும் வகையில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய  நெடுஞ்சாலையில் சுங்கான்கடை பகுதியில் அதிமுகவினர் வரவேற்பு பேனர்கள்,  டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வைத்து இருந்தனர்.இதற்கு திமுக உட்பட பல்வேறு  அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயிர்ப்பலி ஏற்பட்டு  உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகும், அமைச்சரை வரவேற்று தேசிய நெடுஞ்சாலையில்  பிளக்ஸ் போர்டுகள் வைத்து உள்ளனர். இதை அகற்றாவிட்டால், அமைச்சரை கண்டித்து  போராட்டம் நடத்த போவதாக திமுகவினர் அறிவித்தனர். இதனால் பரபரப்பு  ஏற்பட்டது. இந்த தகவல் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.யின்  கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆளூர் பேரூராட்சி செயல்  அலுவலரிடம் திமுகவினர் புகாரும் அளித்தனர். பேரூராட்சி செயல்  அலுவலர் இரணியல் போலீசில் இது பற்றி தகவல் தெரிவித்தார்.இதற்கிடையே பேனரை  உடனடியாக அகற்றும்படி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரூராட்சி செயல்  அலுவலருக்கு உத்தரவு வந்தது.
இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள்  வரவழைக்கப்பட்டு, அதிமுகவினர் வைத்த பேனர்களை அவசர, அவசரமாக அகற்றினர்.  

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.   அமைச்சரை வரவேற்று வைத்திருந்த பிளக்ஸ் போர்டுகள் மட்டுமே எடுக்கப்பட்டன.  அமைச்சரை வரவேற்று வைத்திருந்த அலங்கார வளைவை எடுக்கவில்லை.
இது பற்றி  நீதிமன்றம் எதுவும் கூற வில்லை. இதனால் அலங்கார வளைவை எடுக்க மாட்டோம்  என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

Tags : AIADMK ,Board Employees ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...