×

நடுரோட்டில் கத்தியுடன் மோதிய விவகாரம் நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள்3 பேர் மீது வழக்குப்பதிவு ப்ளூடூத் ஸ்பீக்கரால் பிரச்னை

நாகர்கோவில், செப்.15 :  நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதிய விவகாரத்தில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இரு தரப்பினர் இடையே நேற்று முன் தினம் மோதல் ஏற்பட்டது. பள்ளிக்கு எதிரே உள்ள சாலையில் ஒருவரையொருவர் தாக்கி சட்டையை கிழித்துக் கொண்டனர். ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், கத்தியால் மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவனை வெட்டினர். இதில் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவிகள் அலறி அடித்து ஓடினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், ஆட்டோ நிறுத்தத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தகராறு செய்தவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்களை கத்தியால் மிரட்டி விட்டு ஒரு கும்பல் தப்பியது. படுகாயம் அடைந்த மாணவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி எதிரே மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களும், இளம்சிறார் பட்டியலில் தான் வருகிறார்கள். எனவே அவர்களை பிடித்து அதற்கென உள்ள நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் கூறுகையில், மாணவர்கள் செல்போன் பயன்படுத்தி உள்ளனர். இதில் ப்ளூடூத் மூலம் பாடல் கேட்பதற்கான ஸ்பீக்கரை ஒரு மாணவரிடம் இருந்து மற்றொரு மாணவர் வாங்கி உள்ளார். அதை திரும்ப கொடுப்பதில் உள்ள பிரச்னையில் இந்த மோதல் ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், மாணவர்கள் அதை ரகசியமாக கொண்டு வந்து பயன்படுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளி தான் ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : school students ,Nagercoil ,
× RELATED சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர்...