×

விடுமுறையை தெரியப்படுத்தாத கம்பம் அரசு பெண்கள் பள்ளி தேர்விற்கு வந்து காத்திருந்த மாணவிகள்

கம்பம். செப். 15: கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விடுமுறை குறித்து பள்ளி சார்பாக மாணவிகளுக்கு தெரியப்படுத்தாததால் தேர்வுக்காக வந்த மாணவிகள் காலை 9.30 வரை பள்ளி வாசலில் காத்துக்கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் கம்பம் மற்றம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1300 மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் தற்போது காலாண்டுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுக்கான அட்டவணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வகுப்புகள் வாரியாக காலை, மாலை இரண்டு நேரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை 6 ,7 ,8 ம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்கல்வி தேர்வு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணையில் நேற்று (செப்.14) நடைபெறுவதாக இருந்த உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி தேர்வு செப்.19ம் தேதி நடைபெறும் என்றும் மேலும் பள்ளி நாட்காட்டியில் 14ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனை செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து ஒரு நோட்டீஸ் ஒட்டியதோடு சரி. மாணவிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் பள்ளிக்கூடம் வந்த மாணவிகள் வழக்கத்திற்கு மாறாக பள்ளி பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பள்ளி திறக்கப்படாததால் மாணவிகள் பள்ளியின் வாசலிலேயே காலை 8.00 மணிமுதல் சுமார் 9.30 மணிவரை காத்துக்கிடந்தனர். பின்புதான் விடுமுறை என்று மாணவிகளுக்கு தகவல்கிடைத்தது.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், `` விடுமுறை குறித்து மாணவிகளுக்கு பள்ளியிலிருந்து தகவல் தெரியப்படுத்தவில்லை’’ என்றனர். பின்னர் மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். சுமார் ஒன்றரைமணி நேரமாக மாணவிகள் மற்றும் பெற்றோர் பூட்டிக்கிடந்த பள்ளி முன்பு காத்துக்கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : holiday ,Kambam Government Girls' School Examination ,
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...