×

இளையான்குடி அருகே வைகை நீர்வரத்துக் கால்வாய் சேதம் விளைநிலங்கள் தரிசாகும் அபாயம்

இளையான்குடி, செப். 15: இளையான்குடி அருகே, வைகை நீர்வரத்துக் கால்வாய் சேதமடைந்துள்ளதால், விளைநிலங்கள் தரிசாகும் அபாயம் உள்ளது. பார்த்திபனூர் அருகே வைகை ஆற்றின் குறுக்கே, இடது பிரதான மதகு அணையில் சுமார் 30 கிமீ தூரம் வரை சாலைக்கிராமம் வரத்து கால்வாய் செல்கிறது. வைகை அணை பாசனத்திற்காக திறக்கும்போது இந்த கால்வாய் வழியாகத்தான் தண்ணீர் வரும். இந்த தண்ணீர் செங்கோட்டை, தெ.புதுக்கோட்டை, பிராமணக்குறிச்சி, முள்ளியரேந்தல், முனைவென்றி, திருவுடையார்புரம், சிறுபாலை, புலியூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து, இறுதியாக சாலைக்கிராமம் பெரிய கண்மாய்க்கு வந்தடையும்.

இந்த பாசனக் கால்வாயை நம்பி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த கால்வாயை சீரமைக்க இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், வாணி விலக்கு அருகே, இந்த கால்வாய் கரையில் மண் அள்ளியதால் சேதமடைந்துள்ளது. இதனால் கால்வாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  எனவே, சேதமடைந்த சாரலைக்கிராமம் பாசனக் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி மலைச்சாமி கூறுகையில், ‘வைகை தண்ணீரை நம்பி, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. தண்ணீர் வரும் வரத்துகால்வாய் கரையை உடைத்து மண் திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்து வருவாய்த்துறையினர் கன்டுகொள்வதே இல்லை. மழை காலங்களில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. எனவே, இந்த பகுதியில் விவசாயம் அழியும் நிலை உள்ளது. நீர்வரத்துக் கால்வாயை சீரமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Vaigai ,water canal ,Ilangudi ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...