×

அனுமதியின்றி பேனர் வைத்தால் சிறை கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை, செப். 15: சிவகங்கை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேர் வைத்தால் ஓராண்டு சிறை. அபராதம் விதிக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழாக்களுக்கு பேனர்கள் வைக்க விரும்புவோர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி சம்பந்தப்பட்ட ஆர்டிஓக்களிடம் 15 தினங்களுக்கு முன்னதாக முன் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் சட்டவிரோதமானது. பேனர்கள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் போலீசாரிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியமானதாகும். சமூக, மத, கலாச்சார, அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட எந்த காரணத்திற்காக பேனர்கள் வைக்கப்படுகிறது என்பதை விண்ணப்ப படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். பேனர்களின் அளவு வைக்கப்படும் நாள், பதிப்பாளர் பெயர், பேனர்கள் அகற்றப்படும் தேதி உள்ளிட்ட விபரங்களும் சேர்த்து அச்சிடப்பட வேண்டும்.

எந்த காரணத்திற்காகவும் போக்குவரத்து வழித்தடங்கள், நெடுஞ்சாலை, சாலைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படக்கூடாது. சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு அதனை வைப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து ரூ.5ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்க வழிவகை உள்ளது. எனவே உரிய முன் அனுமதியுடன் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், இடையூறின்றி பேனர்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Prison Collector ,
× RELATED நாகை மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல்...