×

எல்ஐசி ஓய்வு அதிகாரியின் வீட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.10ஆயிரம் கொள்ளை

மதுரை, செப்.15:  மதுரை நாகமலையில் எல்ஐசி ஓய்வு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25பவுன் நகை ரூ.10ஆயிரத்து500 ரொக்கத்தை கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. காரில் காத்திருந்து கண்காணித்து அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை கும்பல் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது,  மதுரை அருகே நாகமலை அன்னைதெரசா தெருவைச் சேர்ந்தவர் குமார்ராஜா(75). எல்ஐசி, ஓய்வு அதிகாரி. இவர் குடும்பத்துடன், மதுரை காளவாசலில் நடந்த திருமணத்திற்கு மாலை 6.30மணிக்கு காரில் கிளம்பி சென்று விட்டு, இரவு 9.30மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன், உள்கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் பின்கதவும் உடைந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவை உடைத்து அதற்குள் இருந்த 25பவுன் தங்க நகைகள், ரூ.10ஆயிரத்து 500 ரொக்கத்தை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. தகவலறிந்து வந்த நாகமலை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வந்தனர்.

  போலீசார் கூறும்போது, ‘‘வீட்டை விட்டு வெளியில் சென்று திரும்பிய 3மணி நேரத்திற்குள் கும்பல், கதவை உடைத்து கொள்ளையடித்துள்ளது. முன்புறம் ஆட்கள் வந்தால் பின்னால் தப்பிச் செல்ல வசதியாக பின்பக்க கதவையும் உடைத்து வைத்துள்ளனர். இதே தெருவில் மேலும் ஒரு வீட்டிலும், அடுத்த தெருவில் ஒரு வீட்டிலும் இதே கும்பல் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை பணத்தை திருடிச் சென்றிருப்பதும், இந்த வீடுகள் அருகிலேயே ஒரு காரில் வெகு நேரம் காத்திருந்து, கும்பல் இந்த கொள்ளையை அடுத்தடுத்து நடத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களின் கைரேகை சிக்கியுள்ளது. இப்பகுதி கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.

Tags : LIC ,retirement officer ,house ,
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...