×

பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக போக்குவரத்து பிரச்னை வழக்கில் அரசு மனு செய்ய வேண்டும்

ஊட்டி, செப்.15:பந்திப்பூர்  புலிகள் காப்பகம் வழியாக தமிழக-கர்நாடக மாநில போக்குவரத்து தொடர  உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தமிழக அரசு மனு செய்ய வேண்டும் என  அமைச்சர் வேலுமணியிடம் மசினகுடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மசினகுடி பகுதியில்  வாழும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சார்பில் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கர்நாடக அரசு  பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக இரவு நேர போக்குவரத்திற்கு தடை  விதித்து ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து கேரள அரசு மட்டும் வழக்கு  நடத்தியது.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கேரள அரசின் மனுவை  தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் எவ்வித மனுவும் தாக்கல்  செய்யாத நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள இரவு 9 மணி முதல் காலை 6  வரையிலான போக்குவரத்து தடையை ஆட்சேபிக்கவில்லை என்பதை உச்சநீதிமன்றம்  ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தது. அதன்பின் பல்வேறு அமைப்புகள், கேரள  அரசு, வனத்துறை சுற்றுச்சூழல் அமைச்சகம், கர்நாடக மனுதாரர், மத்திய சாலை  போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஆகியவை அளித்த மனுக்களின்படி உச்சநீதிமன்றம்  புலிகள் காப்பக மையப்பகுதியில் வரும் சாலைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில்  மூடுவதை கொள்ளை அளவில் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தன.

கேரள அரசு மட்டும்  பொருட்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்காக 24 மணி நேரமும் போக்குவரத்து  வசதி வேண்டும் என மனு செய்துள்ளது. கேரள அரசிற்கு மாற்று வழி வழங்க 4  வாரத்திற்குள் ஏற்பாடு செய்ய வேண்டும். புலிள் காப்பகத்திற்கு வெளியில்  கர்நாடக - கேரளா வரையறுத்துள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக 24 மணி நேரமும்  வாகன போக்குவரத்திற்கு தேவையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.  அதன்பின், புலிகள் காப்பகம் மையப் பகுதி வழியாக செல்லும் சாலையில் வாகன  போக்குவரத்தை முழுமையாக தடை செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

கடந்த  மாதம் 7ம் தேதி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக -  கர்நாடக எல்லையில் உள்ள மசினகுடி, கூடலூர், ஊட்டி மக்களை  பாதிக்கும். எங்களது உறவினர்கள் மற்றும் உடமைகள் அண்டை மாநிலத்தில் அதிகமாக  இருப்பதாலும், விளைப் பொருட்கள் வாங்க மற்றும் விற்பனை செய்ய 39 கி.மீ.,  தூரம் உள்ள குண்டல்பேட்டிற்கு 200 கி.மீ.,க்கு மேல் சுற்றிக் கொண்டு செல்ல  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன  ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கும். எனவே, இவ்வழக்கில்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழக-  கர்நாடக எல்லையில் வாழும் எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். கேரள  மாநிலம் போல் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தை அனுமதிக்க நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் மசினகுடி பகுதி மக்கள்  கூறியுள்ளனர்.

Tags : government ,traffic dispute ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...