×

சின்னமனூரில் முதல்போக விவசாய பணிகள் தீவிரம்

சின்னமனூர், செப்.11: சின்னமனூர் பகுதிகளில் முதல்போகம் நெல் நடவிற்கு இயந்திரம் மூலம் நாற்றாங்கால் நெல் விதை பாவிடும் பணிகளை வேளாண்மை துறையினர் துவக்கினர். பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூலை 29ம் தேதி வினாடிக்கு 900 கன அடி வீதம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் 16,452 ஏக்கர், மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் 26,792 ஏக்கர் உள்பட 45,041 ஏக்கருக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கம்பம்பள்ளத்தாக்கு பகுதிகளில் 25 நாட்களில் வளர்ந்து நெல் நாற்றாக வருவதற்கு வயல்வெளிகளை பண்படுத்தி புரட்டிப்போட்டு நாற்றாங்கால் பாவிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சின்னனமனூர் பகுதிகளில் நான்காயிரம் ஏக்கர் வயல்வெளிகளிலும் விவசாயிகள் நாற்றாங்கால் பாவி வருகின்றனர். அதன்படி வேம்படிகளம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், சீலையம்பட்டி போன்ற பகுதிகளில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சின்னமனூர் வேளாண்மை துறையினர்கள் நேற்று இயந்திர நடவிற்காக நாற்றாங்கால் பாவிடும் பணியினை துவக்கினர். இயந்திர நடவிற்கான பாய் நாற்றாங்கால் பாவிடும் பணி கருங்கட்டான் குளம் பகுதியில் மேற்கொண்டனர்.

இதுகுறித்து சின்னமனூர் உதவி வேளாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சின்னமனூரில் 80 சதவீத சாகுபடி பரப்பில் இயந்திர நடவு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி இயந்திர நெல் நடவு செய்யும் விவசாயிக்கு எக்டருக்கு ரூ.5000 மானியமும், உழவர் ஆர்வலர் குழு விவசாயிகளுக்கு ரூ.6000 மானியமும் வழங்கப்படும். இயந்திர நடவின் மூலம் பயிர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வளர்வதால் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி சீராகவும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாகவும் எலி தொல்லைகள் இல்லாமல் கூடுதலாக மகசூல் பெற முடியும். இடைவெளில் பயிர்கள் இருப்பதால் கோணோவிடர் கொண்டு குறைந்த செலவில் களையெடுக்கலாம். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டி தரும் இயந்திர நடவு முறைக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டிட வேண்டும். எனவே விவசாயிகள் இதனை தவறாமல் பயன் படுத்திட வேண்டுகிறேன் என்றார்.பாய் நாற்றாங்காலின் போது குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி பயிற்சி மாணவர்களும் விவசாயிகளும் கலந்துகொண்டனர். வேளாண்மை அலுவலர் புகழேந்தி, உதவி வேளாண்மை அலுவலர் தாமோதரன், ஜெயசங்கர், லட்சுமி காந்தன், கணேசன், ஆனந்தகுமார் கலந்து கொண்டனர்.

Tags : Chinnamanur ,
× RELATED நேமம் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்