×

ஆணைமடுவு நீர்த்தேக்கத்திற்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை

வாழப்பாடி, செப்.11: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில் உள்ள ஆணைமடுவு நீர்த்தேக்கம், 67 அடி உயரம் கொண்டதாகும். 267 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், கால்வாய் பாசனத்தின் மூலம் 5 தாய் கிராமங்கள் உள்பட சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களும் பயனடைகின்றன. ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இந்த அணைக்கு காவிரி உபரிநீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், ஆணைமடுவு அணைக்கான நீர்வரத்து முற்றிலும் சரிந்து, நீர்மட்டம் 12 அடியாக குறைந்துள்ளது. இதனால், அணையின் மையப்பகுதியில் மட்டும் குட்டைபோல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த அணையை நேற்று கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பி கவுதம சிகாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீர், வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும். குறிப்பாக ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் ஆணைமடுவு நீர்த்தேக்கத்திற்கு, காவிரி உபரிநீரை கொண்டு வருவதன் மூலம் சேலம் மாவட்டம்  மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இது குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கும், நீர்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளேன். மேலும், கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன்.

Tags : reservoir ,Cauvery ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு