×

சீர்மரபினர் நலத்திட்ட உதவி பெற விண்ணப்பம்

சிவகங்கை, செப். 11: சீர் மரபினர் நலத்திட்டங்களை பெற விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரிய உறுப்பினர் விபத்தினால் மரணம் அடைந்தால் ரூ.ஒரு லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரையும், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.15ஆயிரம் மற்றும் ஈமச்சடங்கு செலவினம் ரூ.2ஆயிரம் சேர்த்து, ரூ.17ஆயிரம், கல்வி உதவித் தொகை(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் ஐ.டிஐ படிப்பிற்கு ரூ.ஆயிரம், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பிற்கு ரூ.ஆயிரத்து 500, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்டப்படிப்பிற்கு ரூ.4 ஆயிரம், திருமண உதவித் தொகை ரூ.2 ஆயிரம், மகப்பேறு உதவித் தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவிற்கு ரூ.3 ஆயிரம், கண்கண்ணாடி உதவித் தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளை பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர் என்பதற்கான சாதிச்சான்று மற்றும் குடும்ப அட்டை நகலுடன் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம்அளிக்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED உலக புத்தக தின விழா