×

பர்கூரில் சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, செப்.11: பர்கூரில் நடந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பர்கூரில் நடந்த டெங்கு விழிப்புணர்வு பேரணியை, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பிரியராஜ் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார், முதுநிலை மருத்துவ அலுவலர் டாக்டர் சற்குணம், பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் துணை இயக்குநர் பிரியராஜ் பேசுகையில், ‘மழை காலம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் உருவாகாதவாறு, மேல் மூடி அமைக்க வேண்டும். வீட்டு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதுகுறித்து மாணவ, மாணவிகள் பெற்றோர்களிடம், கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றார்.
பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தொடங்கிய இந்த பேரணி, சென்னை சாலை பிரிவு, ஜெகதேவி சாலை, சின்னபர்கூர், டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கொசுக்களை ஒழிப்போம், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம் என கோஷங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் சென்றனர்.

Tags : Dengue Fever Awareness Rally ,Burgur Health Center ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்