பசுந்தேயிலை பறிக்கும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும்

மஞ்சூர், செப்.11:  தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் இயந்திரத்தை 100 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, கிண்ணக்கொரை உள்ளிட்ட குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் தேயிலை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தேயிலை விவசாயத்தில் நிலவிவரும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கடந்த சில ஆண்டுகளாக தேயிலை தோட்டங்களில் பணிபுரிய தொழிலாளர்கள் பற்றாகுறையும் கடுமையாக உள்ளது. சரிவர வேலை வாய்ப்பின்மை, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான தொழிலாளர்களும் மாற்று வேலை வாய்ப்புகளை தேடி சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாகுறை ஏற்படுகிறது.

இதனால் சிறு மற்றும் நடுத்தர அளவில் தேயிலை தோட்டங்களை வைத்துள்ள விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாகுறையை போக்கும் வகையில் சமீபகாலமாக தேயிலை பறிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள சிறு விவசாயிகளும் தொழிலாளர் பற்றாகுறையால் தேயிலை பறிப்பில் கத்திகளை பயன்படுத்தாமல் இருக்க நவீன தேயிலை பறிக்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். என இண்ட்கோ சர்வ் நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இயந்திரங்களை வாங்க பெருந்தொகை தேவைப்படுவதால் தேயிலை பறிக்கும் இயந்திரங்களை 100சதவீதம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>