×

இரண்டாம் சீசன் துவங்கிய நிலையில் ரோஜா பூங்கா புல் மைதானம் சீரமைப்பு

ஊட்டி, செப்.11:  இரண்டாம் சீசன் துவங்கிய நிலையில், ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகையான ரோஜா செடிகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. ஆண்டு தோறும் மே மாதம் கோடை சீசனின் போது ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, பிப்ரவரி மாதம் கவாத்து செய்யப்பட்டு, மே மாதத்தின் போது புதிய செடிகளில் பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இரண்டாவது சீசனுக்கு, கவாத்து செய்யப்படுவதில்லை. அேதபோல் கண்காட்சியும் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் வண்ணம் செடிகளுக்கு உரமிட்டு தயார் செய்யப்படும்.

இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அனைத்து செடிகளிலும் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் பூங்காவில் உரமிடும் பணிகள், பூச்சிக் கொல்லிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் புல் மைதானங்களை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதி வாரத்தில் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூக்க வாய்புள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களையும் சீரமைக்கும் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் இயந்திரங்கள் மூலம் புல் மைதானங்கள் சீரமைக்கப்படுகிறது. மேலும், ரோலர் மூலம் சமன் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், புல் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 2வது சீசன் துவங்கி உள்ள நிலையில் ஊட்டி...