×

பாப்பாரப்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மறியல்

பாப்பாரப்பட்டி, செப்.11: பாப்பாரப்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி, நேற்று காலை கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பூதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பனங்கள்ளி  கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீருக்காக பல்வேறு இடங்களில் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை பாப்பாரப்பட்டி-தர்மபுரி சாலை எர்ரப்பட்டி முனியப்பன் கோயில் அருகே, காலி குடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு தாசில்தார் வெங்டேஸ்வரன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார், சம்பவ இடம் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன் பேரில், போராட்டத்தை கைவிட்டு  பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பூதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பனங்கள்ளி கிராமத்தில், கடந்த சில மாதமாக ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தபட்டதால், பல மைல் தூரம் தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. இதுபற்றி பல முறை மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மறியல் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்,’ என்றனர்.

Tags : pitchers ,Papparapatti ,
× RELATED வீட்டில் கட்டிவைத்த 2 ஆடுகள் திருட்டு