×

நத்தம் பகுதியில் மழையின்றி காயும் மானாவாரி பயிர்கள் விவசாயிகள் கவலை

நத்தம், செப். 11: நத்தம் பகுதியில் போதிய மழை இல்லாததால் மானாவாரி பயிர்கள் வாடி வதங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நத்தம் பகுதியானது மலையும், மலை சார்ந்த பகுதிகளை அதிகம் கொண்டதாகும். இங்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையானது காட்டாறுகளாக அருகிலுள்ள கரந்தமலை, மொட்டை மலை, கரடிக்குட்டு போன்ற மலைகளிலிருந்து உருவாகும். இவையேதிருமணிமுத்தாறு, விரிச்சலாறு, சம்மையாறு, மலட்டாறு, பாலாறு போன்றவையாகும். இவற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது இப்பகுதியில் உள்ள 400க்கும் மேற்பட்ட கண்மாய்களை நிரப்பும். மேலும் இப்பகுதியில் அதிகமாக மானாவாரி நிலங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் உளுந்து, சோளம், கேழ்வரகு, திணை, வரகு போன்ற தானிய வகைகளும், பருத்தி, நிலக்கடலை, எள், மொச்சை போன்றவையும் பயிரிட்டு வந்தனர். இதற்கு ஆடி மாதம் பெய்யும் மழையை வைத்து விதைப்பு செய்வர். தொடர்ந்து அவ்வப்போது பெய்யும் மழையை கொண்டு அவற்றில் களையை நீக்கி விவசாய பணிகளை தொடர்ந்து செய்து நல்ல மகசூல் பெறுவர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக நத்தம் பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் கண்மாய்கள் காய்ந்து மானாவாரி பயிர்களின் மகசூல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் பெய்த மழையை வைத்து பிந்திய பட்டமாக மானாவாரி பயிர்களை நத்தம் அருகே மெய்யம்பட்டி, ஆவிச்சிபட்டி, சிறுகுடி, சமுத்திராபட்டி, சம்பைபட்டி, புதுக்கோட்டை, காசம்பட்டி, உலுப்பகுடி, புன்னப்பட்டி போன்ற பகுதிகளில் பயிரிட்டுள்ளனர். இவையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் உள்ளதால் வாடி வதங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஆடி மாதத்தில்பெய்த மழையை நம்பி மானாவாரியாக தட்டைப்பயிறு, சோளம், மொச்சை போன்ற பயிர்களை விதைத்தோம். அதன்பின் வாகனங்களில் கருமேகம் சூழ்ந்தாலும் சாரல் மழை கூட இல்லாமல் உள்ளது. இதனால் பயிர்கள் வாடி வதங்கி காணப்படுகின்றன. களை எடுக்கும் பணியும் எடுக்க முடியாமல் உள்ளது. போதிய நேரத்தில் மழை தொடர்ந்து பெய்தால்தான் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து நல்ல மகசூலை பெற முடியும். இதனால் மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்’ என்றனர்.

Tags : area ,Natham ,
× RELATED வாட்டி வதைக்கும்...