×

பட்டிவீரன்பட்டி அருகே லெட்சுமிபுரம் டோல்கேட்டில் லைட் இல்லாததால் அவதி அடிக்கடி விபத்துகளும் நடப்பதாக புகார்

பட்டிவீரன்பட்டி, செப். 11: பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்- குமுளி சாலை லெட்சுமிபுரம் டோல்கேட்டில் மின்விளக்கு வசதி இல்லாததால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்குள்ள லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வாகன கட்டண வசூல் மையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மையம் செயல்படாமல் உள்ளது. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் செல்வதற்கும் மறுமார்க்கத்தில் கேரள மாநிலம் சபரிமலை செல்லும் வழித்தடமாக இச்சாலை விளங்கி வருகிறது. இதனால் இரவு- பகல் என எந்தநேரமும் இச்சாலையில் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் லட்சுமிபுரத்தில் உள்ள கட்டண வசூல் மையத்தில் வாகனங்கள் எந்த வழியாக செல்வது, எந்த வழியாக வருவது என்ற எந்த விதமான அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் வாகனஓட்டிகள் பெரும் குழப்பத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் கட்டண வசூல் மையம் அருகே ஒளிரும் விளக்குகளோ, மின்விளக்கு வசதியோ இல்லை. இதனால் இரவுநேரங்களில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், ‘லெட்சுமிபுரத்தில் செயல்படாமல் உள்ள டோல்கேட்டில் வாகனஓட்டிகள் தெளிவாக அறிய விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் இம்மையத்தில் உள்ள 6 வழிகளையும் திறந்து வைக்க வேண்டும். வாகனஓட்டிகள், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வழிவகுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : accidents ,Letsumipuram tollgate ,Pativeeranpatti ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி