×

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மண்டல அலுவலகம்

கோவை, செப். 11:    தமிழகத்தில் சாலை விபத்து, அவசர கால மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில், 37 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., என்ற நிறுவனம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் சேவை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நிர்வாக காரணத்திற்காக தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து அங்கிருந்து செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., மாநில தலைமை அலுவலர் செல்வகுமார் கூறுகையில், “சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று இடங்களில் மண்டல அலுவலகங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு கோவை, தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு மதுரையும் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிர்வாக பிரச்னைகளை தீர்க்க முடியும். மற்றபடி, கால் சென்டர் சென்னையில் இருந்து மட்டுமே செயல்படும். இதற்காக மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்து பணிகளும் புதிய அலுவலகங்களில் துவங்கும்” என்றார்.

Tags : Office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...