×

கனமழை பெய்தும் சின்னவேடம்பட்டி குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை

கோவை, செப்.11:  கோவை சின்னவேடம்பட்டி குளம் சுமார் 200 ஏக்கர் நீர்தேக்க பரப்பு கொண்டது. 1 லட்சம் ஏக்கர் பாசன பரப்பிற்கான நீர் ஆதாரமாக உள்ள இந்த குளம், கன மழை பெய்தும் நீர் தேக்கமின்றி காணப்படுகிறது. அவினாசி அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாவது மேம்பாட்டு திட்டத்தில் இந்த குளம் சேர்க்கப்பட்டுள்ளது. சில மாதம் முன், இந்த குளத்திற்கு வரும் ராஜ வாய்க்காலில் 8 கி.மீ தூரத்திற்கு நாட்டு மரக்கன்றுகளை தன்னார்வ அமைப்பினர் நட்டனர். உயிர் வேலி மூலமாக இந்த குளத்தின் நீர் வாய்க்கால் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குளத்திற்கு நீர் வரவில்லை. குருடிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் மூலமாக சின்னவேடம்பட்டி குளம் நிரம்பி விடும்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 30 நாளுக்கு மேலாக மழை பெய்து நீரோடையில் வெள்ளம் பாய்ந்தும், குளத்திற்கு நீர் வந்து சேரவில்லை.

குளத்திற்கு நீர் வரும் வாய்க்காலை சில அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தினர் கழிவு நீர் வாய்க்காலாக பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
சின்னவேடம்பட்டி பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ பல ஆண்டாக குளம் சீரமைக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. கன மழை பெய்தும் நீர் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் தடுப்பு அமைத்து விட்டனர். இதனால் குளத்திற்கு வரவேண்டிய மழை நீர் வராமல் போய் விட்டது. 9 ஆண்டிற்கு மேலாக இந்த குளம் நீர் நிரம்பாமல் காய்ந்து கிடக்கிறது. பொதுப்பணித்துறையினர் குளத்திற்கு நீர் வரும் பாதையை சரி செய்யவில்லை, ’’ என்றனர்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘ நீர் பாதை அடைப்பை சரி செய்ய புகார் வந்தது. நீர் வராமல் முக்கிய இடங்களை சீரமைக்கவேண்டியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் நடத்தப்படும், ’’ என்றனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்