×

முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த மணிமுத்தாறு அணை பூங்கா சீரமைக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

அம்பை: முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து கருவேலங்காடாக காட்சியளிக்கும் மணிமுத்தாறு அணை பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையில் கரைபுரளும் வெள்ள நீர், தாமிரபரணியில் கலந்து வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க 1959ம் ஆண்டு மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இதன் மூலம் வீரவநல்லூர், பொட்டல், மூலச்சி, கரிசல்பட்டி, கங்கணாங்குளம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வறண்ட பகுதிகளான திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் மணிமுத்தாறு தண்ணீர் பயன்படுகிறது. இந்த அணையை ஒட்டி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பூங்கா அமைந்துள்ளது. அணை, அருவி மற்றும் பூங்கா ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக இப்பகுதி விளங்கியது. மலை பிரதேசமான மாஞ்சோலை, கோதையாறு, நாலுமுக்கு ஆகியவையும் மணிமுத்தாறு எல்லைக்குள்ளேயே உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர். பள்ளி சுற்றுலாவிற்காக மாணவ, மாணவிகளும் அதிகளவில் வருகை தந்தனர். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பூங்காவில் பலவண்ண மலர் செடிகள், அரியவகை மரங்கள், அலங்கார நீரூற்றுகள், மின்விளக்கு அலங்காரங்கள், அழகிய சிலைகள், பறவைகள் கூடம் போன்றவையும் இருந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நிரம்பியதும் 7 ஷட்டர்களும் திறந்து விடப்பட்டு பூங்கா வழியாக தண்ணீர் பாய்ந்தோடுவது காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மணிமுத்தாறு பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து கருவேலங்காடு போன்று காட்சியளிக்கிறது. பூங்காவில் இருந்த மரம், செடி, கொடிகள் கருகி புதர்களாக மாறியுள்ளன. பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாதனங்கள், ஊஞ்சல்கள் மற்றும் சறுக்கல்கள் உடைந்து கிடக்கின்றன. ஓய்வறைகள் புதர்மண்டி காட்சியளிக்கிறது. பூங்காவில் இருந்து அணையின் மேற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து படிக்கட்டுகளும் உடைந்துள்ளன. சிமென்ட் நடைபாதைகளும் பெயர்ந்து கிடக்கிறது. ஆடு, மாடுகள் மேய்ச்சல் இடமாக மாறியதால் துர்நாற்றமும் வீசுகிறது. தாமரைக்குளங்கள், கண்கவர் நீரூற்றுக்கள் ஆகியவற்றுக்கு அணையில் இருந்து வரும் தண்ணீர் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மணிமுத்தாறு பெருங்கால் மதகு அமைந்துள்ள பகுதியில் இருந்து பூங்காவுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலையை சரி செய்வதுடன், பூங்காவை முழுமையாக சீரமைத்து அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளும், பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மணிமுத்தாறு பகுதிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். சுற்றுலாத்துறை மேம்பாடு அடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். எனவே மணிமுத்தாறு பூங்கா விவகாரத்தில் தமிழக சுற்றுலாத்துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மீன்களை பிடிக்க அனுமதியில்லாததால் வருமானம் இழப்புஅணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும், இதனால் அணைக்குள் மீன் பிடிக்க மீன்வளத்துறைக்கு அனுமதி அளிக்க வனத்துறை மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னையால் தினமும் மீன்கள் திருட்டு நடப்பதாகவும், இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கிய நிதி என்னாச்சு?மணிமுத்தாறு பகுதி மக்கள் கூறுகையில், ‘பூங்காவை சீரமைக்க அவ்வப்போது நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அந்த நிதியை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பூங்கா மற்றும் சுற்றுப்பகுதி சாலைகளில் எரியாத மின்விளக்குகள் கூட மாற்றப்படாமல் இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுகிறது. இதனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறும் அபாயம் உள்ளது. அணை பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உள்ளது. மாலை நேரங்களில் குடிமகன்கள் இங்கேயே குடித்துவிட்டு அணைக்குள் இறங்கி குளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அணை சார்ந்த மேற்பார்வை, பாதுகாப்பு, கண்காணிப்பு, பயன்பாடு போன்றவற்றை எந்த துறையினர் மேற்கொள்கின்றனர் என்பதும் தெரியவில்லை, என்றனர்….

The post முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த மணிமுத்தாறு அணை பூங்கா சீரமைக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Manimutharam Dam Park ,
× RELATED கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு;...