×

அன்னை சத்யா நகரில் ரூ.30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு

ஈரோடு,  செப். 11:   ஈரோடு அன்னை சத்யா நகரில் கூடுதலாக 336 வீடுகள் கொண்ட  அடுக்குமாடி குடியிருப்பு ரூ.30 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட  உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர். தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கடந்த  1987ம் ஆண்டு ஈரோடு பெரியஅக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியில்  பிச்சைக்காரன்பள்ளம் ஓடையை ஒட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்  கொடுக்கப்பட்டது. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு 30 ஆண்டுக்கு மேலான  நிலையில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக  ரூ.35 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி  குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பணம்  செலுத்தியவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. இதே பகுதியில் 228 வீடுகள்  கொண்ட மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில்  உள்ளது. இந்த வீடுகளை இடித்து விட்டு ரூ.30 கோடியில் புதியதாக 336 வீடுகள்  கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.

இதையடுத்து இங்கு  வசித்து வரும் வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக  வழங்கப்பட்டு வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை  75 பேருக்கு இடைக்கால நிவாரண பணம் வழங்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கியவர்கள்  வீடுகளை காலி செய்துள்ளனர்.   மீதமுள்ளவர்களையும் காலி செய்ய தமிழ்நாடு  குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து  அதிகாரிகள் கூறியதாவது: குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள்  கட்டி கொடுப்பதற்காக தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில்  நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல ஆண்டுகள் ஆனநிலையில் மிகவும் மோசமான நிலையில்  உள்ள வீடுகளை இடித்து விட்டு தற்போது புதியதாக வீடுகளை கட்டி கொடுத்து  வருகிறோம். ஏற்கனவே அன்னை சத்யா நகரில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி  குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பேர் இந்த  வீட்டிற்கான பணத்தை செலுத்தி குடியேறியுள்ளனர். மீதமுள்ளவர்களும் தொடர்ந்து  பணம் கட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து அருகிலேயே உள்ள பழுதடைந்த  நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி  குடியிருப்பு கட்ட உள்ளோம்.

தற்போது குடியிருப்பவர்கள் வீடுகளை காலி  செய்த பிறகு இங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்பட்டு அகற்றப்படும். மேலும் எவ்வளவு  பரப்பளவில் வீடுகளை கட்டுவது என்பது முடிவு செய்யப்படும். தற்போது  வீடுகளில் வசித்து வருபவர்கள் வீடுகளை காலி செய்த பிறகு படிப்படியாக பணிகள்  துவங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : apartments ,city ,Satya ,
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...