×

பிறந்த சில மணி நேரத்தில் சாக்கு மூட்டையில் சுற்றி புதரில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பெரம்பலூர்,செப்.11: பெரம் பலூர் அருகே பிறந்த சில மணி நேரத்தில் சாக்கு மூட்டையில் போர்த்தி புதரில் வீசப்பட்ட ஆண் பச்சிளங்குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மேலும் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே உள்ளது அயிலூர் கிராமம். இவ்வூரில் இருந்து சிறுவாச்சூர் நோக்கி வரும் சாலையில் வலதுபுறத்தில் 200 மீட்டர் தொலைவில் பெண்கள் பொது கழிப்பிடமாக பயன்படுத்தப்படும் புதர் மண்டிய பகுதி உள்ளது.
இங்குள்ள புதர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று பசியாலும், ஈக்கள் எறும்புகள் மொய்த்து துன்புறுத்தியதாலும் தொடர்ந்து கதறி அழுதபடி இருந்தது. குழந்தை சாக்கு ஒன்றில் போட்டு கொண்டு வந்து வீசப்பட்டிருந்தது.
பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சென்ற மூதாட்டி ஒருவர் அயிலூரில் இருந்து சிறுவாச்சூர் நோக்கி பைக்கில் சென்ற ஒருவரிடம் மாலை 4.45 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.அந்தநபர் உடனடியாக பெரம்பலூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கனகராஜ் (42), அதில் பணிபுரியும் அவசர மருத்துவ உதவியாளர் ராஜதுரை (29) ஆகியோர் அயிலூர் அருகே காணப்பட்ட புதூர் புதர் பகுதிக்கு 5 மணிக்குள் சென்று கதறி அழுது கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு அதற்கான அவசர முதலுதவி சிகிச்சையை 108 ஆம்புலன்ஸ் உள்ளேயே கொடுத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அதி விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு வந்து சேர்த்தனர்.அங்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பதால் அதற்கு சுவாச கருவிகள் மூலம் சுவாசம் அளிக்கப் பட்டு வருகிறது.

உரிய நேரத்தில் விரைந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கனகராஜ் மற்றும் ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் ராஜதுரை ஆகியோருக்கு அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அயிலூர், சிறுவாச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் துரித நடவடிக் கை எடுத்து அய்யலூர் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து பிறந்த குழந்தையை முட்புதரில் வீசி விட்டு சென்ற பெண் யார், அவர் திருமண வயதை எட்டாத மைனர் பெண்ணா, வறுமை காரணமாக பெற்ற குழந்தையை எந்த பெண்ணாவது வீசி சென்றாரா அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்த பிறந்த குழந்தையா என்பது குறித்து விசாரணையை சுகாதாரத்துறை செவிலியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் மூலம் முடுக்கி விட்டால் குழந்தையின் தாய் குறித்த விபரம் விரைந்து ஒரே நாளில் தெரியவரும்.



Tags : bush ,infant hospital ,birth ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி