×

ஆய்வுக்கு பிறகு நாக் கமிட்டி அங்கீகாரம் பாளை சேவியர் கல்லூரி தேசிய அளவில் முதலிடம்

நெல்லை, செப். 11:  பாளை. சேவியர் தன்னாட்சி கல்லூரிக்கு தேசிய தரமதிப்பீட்டுகுழு ஏ++ என்ற தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் இக்கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. இதை வரவேற்று  கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் உற்சாக நடனமாடி கொண்டாடினர் தென்னிந்தியாவின் பல்கலைக்கழகமாக பாளையங்கோட்டை திகழ்கிறது. இங்கு பல்வேறு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி, சித்த மருத்துவக்கல்லூரி,  உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூறு ஆண்டுகளை கடந்து கல்வி சேவை ஆற்றி வரும் பாளை. சேவியர் தன்னாட்சி கல்லூரிக்கு தேசிய தரமதிப்பீட்டுகுழு ஏ++ என்ற தர  மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் இக்கல்லூரி முதலிடம்  பெற்றுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மரியதாஸ், கலைமனைகள் அதிபர் ஹென்றி ஜெரோம், இணை முதல்வர் ஜோசப் ஆல்பர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய தர மதிப்பீட்டுகுழு (நாக் கமிட்டி) கடந்த ஆக.26 மற்றும் 27ம் தேதி எங்கள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, ஆய்வுப்பணி, அடிப்படை வசதிகள், மாணவர்கள் ஆதரவு, கல்லூரி தனித்திறன்கள் உள்ளிட்ட 7 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், எங்கள் கல்லூரிக்கு ஏ++ (3.66 புள்ளிகள்) வழங்கியுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேவியர் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. தமிழக அளவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனை ஆகும். 2023ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை ெகாண்டாட உள்ள நிலையில், எங்கள் கல்லூரி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறோம். பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், கல்லூரி ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த கடின உழைப்புக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுக்கு இந்த அங்கீகாரம் தொடர்ந்து இருக்கும். 2000ம் ஆண்டில் 5 நட்சத்திர தகுதியும், 2006ல் ஏ கிரேடும், 2012ல் A 3.66 தரத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். முதற்கட்டமாக சேவியர் ஆராய்ச்சி அறக்கட்டளைதொடங்கி உள்ளோம். நிகர்நிலை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தெரியவந்ததும் இதை வரவேற்ற மாணவ, மாணவிகள் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டை முழங்க கல்லூரி வளாகத்தில் நிர்வாகிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டாடினர்.

Tags : Xavier College of Knock Committee Recognition ,nation ,
× RELATED 18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம்...