×

பல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு

சென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரப் பகுதியை தூர்வாரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழவேற்காடு பகுதியை சேர்ந்த உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள உவர் நீர் ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய நீர்பரப்பை கொண்டது பழவேற்காடு ஏரி. வடக்கில் ஸ்வர்ணமுகி ஆறும், வட மேற்கில் காலாங்கி ஆறும், தெற்கில் ஆரணி ஆறும், பக்கிங்காம் கால்வாய் மற்றும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன.
ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஹரிகோட்டாவின் வட முனையிலும், தென்முனையிலும் ஏரி நீர் கலக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இந்த ஏரி தண்ணீரை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி பழவேற்காடு ஏரியில் ஆண்டுதோறும் 1200 டன் மீன்கள் பிடிக்கப்படுகிறது. மீன்பிடிப்பதை மட்டும் தொழிலாக கொண்டு 12 ஆயிரத்து 370 மீனவர்கள் பழவேற்காடு ஏரியை நம்பி உள்ளனர். முக்கியமாக, இந்த ஏரிப்பகுதி பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது. மிகவும் பிரபலமான இந்த ஏரியில் கலக்கும் ஓடை கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், ஏரி மாசடைந்துள்ளது.  ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர் வாரும் திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கினாலும், இதுவரை முறையாக தூர்வாரப்படவில்லை.
எனவே, பழவேற்காடு ஏரியை தூர்வாருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில்  மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : millions ,
× RELATED கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடல்...