×

அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு : உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு

திருவள்ளூர், செப். 11: திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், மர்ம காய்ச்சலால் நோயாளிகள் குவிந்து வருவதை தொடர்ந்து, அங்கு முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. படையெடுத்து வரும் கொசுக்களால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பருவ மழை காலமும் துவங்கியதால் மழை விட்டு, விட்டு பெய்கிறது. தட்ப வெட்ப சூழ்நிலையிலும் மாறி வருகிறது. காலையில் சாரல், மதிய நேரங்களில் லேசான வெயில் உணரப்படுகிறது. இந்த மாற்றம் கொசு உற்பத்திக்கு துணைபுரிகிறது. சிறு பள்ளங்களில் தேங்கிய கழிவுநீரில் கூட கொசு உற்பத்தி உள்ளது.

இந்த மாவட்டத்தில்தான் டெங்கு தலைவிரித்தாடி, 20க்கும் மேற்பட்டோரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பலி வாங்கியுள்ளது. இந்நிலையில், இதுவும் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற பீதியில், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் காய்ச்சலால் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையினை உடனடியாக அளிக்க அவர், டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். வார்டுகளில் குடிநீர் வழங்கவும் அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தயாளன் உட்பட டாக்டர்கள் உடனிருந்தனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...