×

வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் மண்பாதையை அகற்றி தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்

வாலாஜாபாத், செப். 11: வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில், மண்சாலையை அகற்றி தார்ச் சாலையாக அமைக்க வேண்டும். மேலும், இந்த சாலையில் உள்ள குறுகிய பாதையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் அங்கன்வாடி மையம், கிராம சேவை மையம், ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ரேஷன் கடை உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த ஊராட்சியில் மக்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இதில் வேர்க்கடலை, நெல் உள்பட பல்வேறு பயிர்களை  விவசாயம் செய்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் கிராமத்தை சுற்றி, இந்த 500 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன.

ஒழையூரில் இருந்து மேட்டூர் செல்ல வேண்டுமானால், இங்குள்ள மண் சாலை வழியாக செல்ல வேண்டும். இதே பகுதியில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை கடப்பதற்கு குறுகிய அளவிலான தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக, விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஒழையூரில் இருந்து மேட்டூர் வரை செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இந்த சாலையை ஒட்டி ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை கடந்து செல்வதற்காக கடந்த 1987ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த சமயத்தில் 3அடி கொண்ட குறுகிய பாலமாக கட்டினர். இதில் பைக்கிலும், நடந்தும் மட்டுமே செல்ல முடியும். இந்த பாலம் வழியாகே, ஒழையூரில் இருந்து மேட்டூருக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக ஒழையூர் கிராம மக்கள் பெரும்பாலானோர், மேட்டூரை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். இவர்கள், தங்களது விவசாய நிலங்களுக்கு டிராக்டர் அல்லது விவசாய நிலங்களில் அறுவடை செய்த பொருட்களை வீட்டுக்கு கொண்டு செல்ல சுமார் 5 கிமீ சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

இதுமட்டுமின்றி, மேட்டூர் கிராமத்தில் இருந்து ஒழையூர் வரை அத்தியாவசிய தேவைகளுகளான  ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள், இந்த மண் சாலை வழியாக செல்லவேண்டும். லேசான மழை பெய்தாலே, இந்த மண் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி சிறுவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மண் சாலையில் வழுக்கி விழுந்து, பள்ளி மாணவர்களின் உடைகள் நாசமாகிறது. பொதுமக்களின் பொருட்கள் கீழே கொட்டி வீணாகிறது. இந்த சாலையை அகற்றி தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பலமுறை கிராம சபை கூட்டத்திலும், ஊருக்கு வரும் மாவட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் ஊரில் உள்ள மண் சாலையை தார்ச்சாலை மாற்ற வேண்டும். குறுகிய பாலத்தை விரிவு படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Walajabad Union ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...