×

கலெக்டர் அலுவலகம் பின்புறம் சுகாதார சீர்கேட்டில் கச்சபேஸ்வரர் கோயில் தாயார் குளம்

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தாயார் குளம் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடைந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிற்னர். குளத்தில் உள்ள குப்பைகளை உடனே அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா். காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் காயாரோகணீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலுக்கான குளம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது. இந்த குளத்தை, தாயார் குளம் என அழைக்கப்படுகிறது.
இந்த குளத்தில் உள்ள தண்ணீரில் தேங்கியிருக்கும் குப்பை, கழிவுகளை உடனுக்குடன் அகற்றாததால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மற்ற கோயில் குளங்களுக்கு இல்லாத சிறப்பாக தாயார் குளம், ஐந்து மூலைகளை கொண்டுள்ளது. இந்த குளத்தில் கச்சபேஸ்வரர் கோயில் சார்பில், ஆண்டுக்கு ஒரு முறை தெப்ப உற்சவம் நடைபெறும். அதேபோல், அமாவாசை உள்ளிட்ட பிரத்யேகமான நாட்களில் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

இதுபோன்று தர்ப்பணம் செய்பவர்கள், குளத்தின் படிகளில் அமர்ந்து திதி கொடுத்த பின், தேவையில்லாத கழிவுகளை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் குளத்தில், பிளாஸ்டிக் பைகள், தேங்காய் நார், துணிகள், காகித கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் குளத்து நீர் மாசடைந்து வருகிறது. மேலும் குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி குளத்தை சீரமைப்பதுடன், குளத்து நீரை மாசடையாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : pool ,Kachapeswarar Temple Mother ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...