×

காவனூர் கிராமத்தில் 8.2 லட்சம் மதிப்பில் அமைத்த ஒரே மாதத்தில் ஆழ்துளை கிணறு பழுது

ஸ்ரீபெரும்புதூர், செப். 11: குன்றத்தூர் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் கலைஞர் நகர், மேட்டு காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அதன் மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை தவறியதால், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் ஆள்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதையடுத்து, புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், எம்எல்ஏ பழனி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் அமைக்க 8.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.  இதையடுத்து கடந்த மாதம் மேட்டு காலனி வரவு கால்வாய் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் இருந்து கலைஞர் நகர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை பைப் அமைத்தனர்.ஆனால், இதுவரை இயங்கவில்லை.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு அதிகாரிகள், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை முறையாக கண்காணிக்காமல் அலட்சியப் போக்கில் விட்டதால், இப்பணியை எடுத்த கான்ட்ராக்டர் பணத்தை சுருட்டிக் கொண்டு, பணியை முறையாக செய்யவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவனூர் ஊராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் எம்எல்ஏ தொகுதி நிதியில் ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு பணியை செய்துவிட்டு அதிகாரிகளும், கான்ட்ராக்டரும் பணத்தை சுருட்டிவிட்டனர்.
மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை பள்ளம் தோண்டி பைப் புதைக்க வேண்டும். ஆனால் தரையில் அமைத்துவிட்டு அதனை சரிவர மூடவில்லை. அனைத்து பைப்புகளும் வெளியே தெரிகின்றன.இதனால் அவ்வழியாக செல்லும் சமூகவிரோதிகள் இந்த பைப்புகளை திருடி செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, இயங்காத ஆழ்துளை கிணற்றுக்கு பணத்தை எடுத்த கான்ட்ராக்டர் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : village ,Kavanur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...