×

கோவில்பட்டி, கழுகுமலையில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கோவில்பட்டி, செப்.11: கோவில்பட்டி நகரில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கோவில்பட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. தீப்பெட்டி ஆலைகள் நிறைந்த இந்நகரில் கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன.  கடந்த சில மாதமாக நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரில் பசுவந்தனை ரோடு, எட்டயபுரம் மெயின்ரோடு, புதுரோடு, புதுக்கிராமம், சுப்பிரமணியபுரம், கருணாநிதிநகர், பாரதிநகர், ஜோதிநகர், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், ஏகேஎஸ் தியேட்டர் ரோடு, நடராஜபுரம், காந்திநகர், அண்ணா பேரூந்து நிலைய பகுதி, வள்ளுவர்நகர், கடலையூர்ரோடு, வக்கீல்தெரு, பாரதிநகர் மேட்டுத்தெரு, வஉசி நகர், கதிரேசன் கோவில் ரோடு, வீரவாஞ்சிநகர், ராம்நகர், மந்தித்தோப்பு ரோடு உள்ளிட்ட பெரும்பாலான தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

இரவில் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் பெண்கள், முதியோர் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். சில நேரங்களில் நடந்து  செல்வோரையும் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் நாய்கள் துரத்துகின்றன. இதனால் விபத்துக்களும் நேரிடுகின்றன.
எனவே கோவில்பட்டி நகரில் சாலைகளில் சுற்றுத்திரியும் நாய்களை பிடிக்கவும், அவைகளை கட்டுப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கழுகுமலை: கழுகுமலை பேரூராட்சியில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து தெருக்களிலும் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகனத்தில் வரும் நபர்களை துரத்துகிறது. மேலும் சாலைகளில் அங்கும் இங்குமாக ஓடி வருவதால் வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். தெரு நாய்களில் சில நோய்கள் தாக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரிவதால் பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : streets ,Kovilpatti ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...