காரைக்கால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவர அழகு படுத்தும் பணி மும்முரம்

காரைக்கால், செப்.11: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காரைக்கால் மாவட்ட கடற்கரையை அழகுப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.கடந்த 2004 சுனாமிக்கு பிறகு காரைக்கால் மாவட்ட கடற்கரை உருகுலைந்து போனது. தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, காரைக்கால் மாவட்ட கடற்கரையில், புதிய பூங்கா, செயற்கை நீரூற்று, நடைபாதை, அலங்கார மின்விளக்குகள் என ஒருசில பகுதிகள் அழகுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அடுத்த கட்ட அழகுப்படுத்தும் பணியும், விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சில மைதானமும் விரைவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அப்பணி நிதிநிலை காரணமாக முடங்கிப்போனது.

இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குனர் முகம்மது மன்சூர் நேற்று காரைக்கால் வந்தார். தொடர்ந்து, காரைக்காலுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், இயற்கையான அழகிய மரங்கள் நிறைந்த பூங்கா மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக, கடற்கரை கைபந்து மைதானம், கபடி மைதானம், விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அசனா, சுற்றுலா துறை இயக்குனர் முகம்மது மன்சூர், துணை கலெக்டர் பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், புதுச்சேரி சுற்றுலா துறை மூலம், காரைக்கால் கடற்கரையை மரங்கள் நட்டு அழகு படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை கலெக்டர் விக்ராந்த் ராஜா, தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அசனா, சுற்றுலாத் துறை இயக்குனர் முகம்மது மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Tags : Tourist places ,Karaikal ,
× RELATED கீழடியில் தமிழரின் வரலாற்று...