×

குமரியில் புலிகள் சரணாலயத்திற்காக அமைக்கப்படும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து விடும் வசந்தகுமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு; முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு

நாகர்கோவில், செப்.11: குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயத்திற்காக அமைக்கப்படுகின்ற சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துவிடும் என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார். வசந்தகுமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயத்திற்காக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 17 வருவாய் கிராமங்கள் முழுமையாக உட்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 17 வருவாய் கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதைந்துவிடும். எனவே ‘சீரோ பாயின்ட்’ பகுதிகளோடு இந்த வனப்பகுதி விரிவாக்கத்தை அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் வருமானம் இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், பாதிக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் குரலாக இதனை தெரிவிக்கின்றோம்.

முதல்வர் தலையிட்டு இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் பேசுவோம். ஏற்கனவே தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக 800க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் ெதாடர்பாக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களிடம் சென்று கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம். சூழலியல் மண்டலம் வந்தால் அந்த பகுதிகள் வனத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்றாலும் வனத்துறையிடம் அனுமதி பெற ேவண்டும். சூழலியல் தாங்கு மண்டலத்தில் வரும் 17 வருவாய் கிராமங்களில் 12 கிராமங்கள் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. பெரும்பாலான மக்கள் இந்த பகுதியில் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

 குமரி மாவட்டத்தை புறக்கணிக்கின்ற நிலை அரசிடம் இருந்து வருகிறது. மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் சாலை விரிவாக்கத்திற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. பொதுமக்கள் அதிருப்தி அடையும் வகையில் செயல்களை செய்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, கிராம சாலைகள் அனைத்துமே சேதமடைந்துள்ளன. மக்கள் எம்பி, எம்எல்ஏக்களை குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் எடுத்துரைத்தும் அதிகாரிகள் பயம் இல்லாமல் உள்ளனர். ஒரு வாரம் கழித்த பின்னர் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  குமரி மாவட்ட குளங்கள், கால்வாய்களை தூர்வார எனது சொந்த செலவில் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பொருளாதார சீரழிவு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எந்த ஒரு தனி நபரையும் அதிகாரிகள் கைது செய்கின்ற வகையில் சட்டம் உள்ளது. அடுத்த தேர்தல் வந்தால்தான் இதற்கு முற்றுப்புள்ளி வரும். மத்திய அரசின் 100 நாட்கள் சாதனையில்லை. மோடி உலகை சுற்றிப்பார்த்து அங்குள்ள அதிபர்களுடன் கை குலுக்கி போஸ் ெகாடுத்துக்கொண்டு வருவது சாதனை அல்ல, அது வேதனை. இஸ்ரோவில் சிவன் செய்ததுதான் இந்தியாவின் சாதனை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பேட்டியின்போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட், குமரேசன், கிறிஸ்டி ரமணி, ஐயப்பன் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Vasanthakumar ,sanctuary ,Kumari ,Tiger ,
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...