×

குடும்ப தகராறில் அடிக்கடி பஞ்சாயத்து பேசியதால் விவசாயியை வெட்டி கொன்றேன்

நெல்லை, செப். 10:  மானூர் அருகே குடும்ப தகராறில் அடிக்கடி பஞ்சாயத்து பேசி மனைவிக்கு ஆதரவளித்ததால் விவசாயியை வெட்டிக்கொன்றதாக கைதான தொழிலாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை அடுத்த மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (52).  விவசாயியான இவரும் இவரது மனைவி ஆறுமுகத்தம்மாளும் பைக்கில் நேற்று முன்தினம் இரவு மதவக்குறிச்சி விலக்கிலுள்ள மாடசாமி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது முருகனை வழிமறித்த பக்கத்து வீட்டை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளி முத்துராமலிங்கம் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் உயிருக்கு போராடிய முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து வழக்குப் பதிந்த மானூர் போலீசார், முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனது பக்கத்தை வீட்டை சேர்ந்த முருகன் குடும்பத்தினரும் எனது குடும்பத்தினரும் முதலில் நன்றாக பழகி வந்தனர். இதனையடுத்து கடந்த ஒரு ஆண்டாக எனக்கும் எனது மனைவி துர்க்காதேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்த போதெல்லாம் எங்கள் இருவரையும் முருகன் சமரசம் செய்து வைப்பார்.

 இதனால் நாளடைவில் முருகன், அவரது மனைவி ஆறுமுகதம்மாள் ஆகியோரின் பேச்சுக்களை கேட்டு எனது மனைவி நடக்க துவங்கினார். இதனால் எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தேன். இதனால் முருகன் மீது ஆத்திரம் கொண்டு அவரிடம் வாய் தகராறில் ஈடுபடுவேன். அவரும் பதிலுக்கு என்னிடம் வாய் தகராறில் ஈடுபடுவார்.  இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டு நாய் என்னை பார்த்து குரைத்தது. மது குடித்து இருந்த நான் நாயை வெட்டிக்கொன்று விடுவேன் என அவரது மனைவியிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது அங்கு வந்த முருகன், பொதுமக்கள் மத்தியில் என்னை கண்டித்தார். இதனால் அவமானம் அடைந்த நான், பழிக்குப்பழியாக முருகனை வெட்டிக்கொலை செய்ய திட்டமிட்டு, அவரை கொன்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான முத்துராமலிங்கத்தை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

உடலை வாங்க மறுத்து மறியலுக்கு உறவினர்கள் முயற்சி: நெல்லை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்ட முருகனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று மதியம் சாலை மறியலுக்கு முயற்சித்தனர். இதனையறிந்து அங்கு வந்த பாளை தாசில்தார் பாலசுப்பிரமணியன், தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு, நெல்லை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள், முருகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் அரசு நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெற்று தரவும்  மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என கூறினர். இதனையடுத்து உறவினர்கள், முருகனின் உடலை பெற்று நேற்று மாலையில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தையொட்டி மதவக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி